பூக்கள் பூத்த மரங்கள் புன்னகைக்கும் பெண்கள் போல் அழகு!
இலைகள் படபடக்கும் இன்பம் வானுக்கும் பூமிக்கும் பாலம் அமைத்திடும் நித்தம் பறவைகள் வந்து தங்கும் முற்றம்! இங்கிருந்துதான் இன்னிசைக் கச்சேரி காலையும், மாலையும். துயிலெழுப்பும் சங்கீதச் சத்தம்! பூக்கள் பூத்த மரங்கள் … புன்னகைக்கும் பெண்கள் போல் அழகு! தென்றல் காற்றில் மெல்ல அசையும் மரங்கள்… நண்பன் ஒருவன் ஆமோதித்து தலையசைப்பது போன்ற நினைவு, சூரிய ஒளிதனை தன் இலைக்கரங்களில் வாங்கி பருகும் நீயும், நானும் அருந்த இன்பக் கனிகளை அருளும்! அன்பாய் வளர்ந்த ஆலமரம், அரசமரம் ஆகிவிடுகிறது சட்டென ஒரு பேருந்து நிறுத்தம். புயலினை எதிர்த்து போரிட்ட மரங்களின் முகங்களில் சாய்ந்து விட்ட மரங்களை நினைத்து சின்ன வருத்தம்! விண்ணை முட்டி வளர்ந்தாலும் தன் மடியில் வந்து அமரும் களைத்த பாதசாரிக்கும் கவரி வீசும்! உழைத்துக் களைத்த கால்கள் நடந்து போகும் பாதையில் .. இவை வண்ணப் பூக்களை அள்ளி அள்ளி வீசும்! ஆக்கம்: கவிராஜன் ...