பெற்றோர்மை!
ஏழ்கடல் சூழ்ந்த எழிலாம் உலகில்
வாழ்வது நிறைவது வளர்ப்பின் முறையால்
ஆழ்மன நூலால் ஆகிடும் எண்ணம்
வாழ்வாம் ஆடையை வளர்ப்பே நெய்யும்
வேகம் கடந்த விரிந்த அறிவால்
தாகம் தணிந்த தெளிவுடை மனதால்
போகும் பாதையில் பிள்ளையும் வளர
ஆகும் தந்தை அன்னையின் அறிவு
பெற்றோர் வீட்டில் போடும் சட்டம்
பிள்ளைகள் அறிவின் வரைமுறை விட்டம்
தொல்லைகள் அல்ல கொடுங்கோல் புரிய
நல்லவை விளையும் எல்லைகள் விரிய
வளர்ந்த மரத்தில் வம்பாய் நீரிடல்
தளர்ந்த மதியில் தோன்றும் திட்டம்
வளர்ந்த பின்னர் வளவள வென்றே
உளரல் போன்ற உரைகள் வேண்டாம்
திடமாம் மனதின் தன்னம் பிக்கை
நடமே இடுமே நல்லிடம் தந்தே
மடமே வளர்ந்த மக்களை மிதித்தல்
குடத்தின் நிறைபோல் கடலாய் விரிக
சிந்தையில் நிற்கும் சிறந்த பெற்றோர்
விந்தை உலகில் வாரிசு களையே
சந்திர இதமாய் சத்தியத் துணையாய்
அந்தியின் அழகாய் அரவணைப் பவரே!
ஆக்கம்: கவிஞர். புதுயுகன்

கருத்துகள்