மறதி அணிக !!
மறதி அணிக !!
கசடறக் கற்ற நெளிவு சுளிவுகளின்
கசடுகள் கழிய - மறதி அணிக...
இன்றையக் கணக்கை இரவில் கரைத்து..
நாளைய நாளை புதிதாய்த் திறக்க - மறதி அணிக!!
மடிந்த சண்டைகள், முடிந்த காதல், முடியாத முகத்திதி
மூன்றும் எதிர் வந்தால் - மறதி அணிக
சாதனையின் கர்வம், சோதனையின் தொய்வு
இரண்டும் வேகத்தடை - மறதி அணிக
எதிரியின் பலத்தை மனதில் பின்வைக்க
பலவீனம் மாற்றி உம் பலத்தை முன்வைக்க
அவ்வப்போது, ஆங்காங்கே - மறதி அணிக
கற்கும் போது கற்ற திமிரும்
கற்பிக்கும் போது கல்லாத துறையும்
தற்கொலையின் தம்பிகள் - மறதி அணிக
பேரின்பப் பயணத்தில் சிற்றின்பச் சாலையையும்
சிற்றின்பச் சாலையில் பேரின்பப் பிரச்சாரத்தையும்
மறந்தும் செய்யாமல் - மறதி அணிக
சிறுதீமைகளாம் புகை மதுவும்
பெருந்தீமைகளாம் பொறாமை புரளியும்
தாண்டிக் கடக்க - மறதி அணிக
பிறர் செய்த தீமையும்
நீர் செய்த நன்மையும்
நீங்காமல் நின்றால் - மறதி அணிக
முடியாது தெரியாது மாறாது என்ற
எதிர்மறைகளை எதிர்கொண்ட மறுநொடியே
- மறதி அணிக
நிறைந்த வழியும் நினைவுகள் மாளிகையின்
ஒற்றைச் சாளரம் மறதி - அதனால் அணிக
மறதி மாணிக்கம் என இனி யாரேனும் ஏசினால்
நன்றி நவின்று இக்கவிதையைக் காட்டுக!
ஆக்கம்: கவிஞர் புதுயுகன்
*நூலாசிரியர்: "மடித்து வைத்த வானம்" (கவிதை),
"கனவும் வெற்றியும் பேசிக்கொண்டவை' (சுய முன்னேற்றம்)
"Air, Fire & Water" ( History of Vedaranyam Salt Satyagraha) மற்றும் பிற நூல்கள்
*மஹாத்மா காந்தியடிகள் சட்டம் பயின்ற University Collge of London (UCL) பணியாற்றி வருகிறார்.

கருத்துகள்
இரண்டும் வேகத்தடை - மறதி அணிக"
என்ற சத்தான தன்னம்பிக்கை 'டானிக்' வரிகள் தந்தமைக்கு அன்பின் மாலை அணிக!!
தொடரட்டும் தங்கள் பணி.