விரல் நீள ஹிட்லர்
புகைத்துக் கொல்லும்
`நான்கு அங்குல’ தீவிரவாதி..
புற்று நோயின்
அழகிய அந்தரங்க காரியதரிசி
வெள்ளை உடுத்தி வரும் இவள்..
உண்மையில்
உயிர்களைக் கொள்ளையிடும்
ச (ர)ம்பல் கொள்ளைக்காரி!
உதட்டளவில் மட்டும் உறவாடிக் கெடுக்கும்
ஒரு போலி நண்பனை
ஒத்தவள்
இந்த மனப்புகைச்சல் பேர்வழி
விரல் இடுக்கில் ஒய்யாரமாய் வீற்றிருக்கும்
இந்த`விலை மகள்`
இளைஞனின் உதடுகளை முத்தமிட்டு,,முத்தமிட்டு
தரும் சுகம்
ஒரு விலைமாதுவின் படுக்கையறையில் கிடைக்கும்
அற்ப சுகத்தினை ஒத்தது
இளைஞனே...
நீ உற்சாகமாய் உறிஞ்சி
உள்ளிழுத்துச் சுவைக்கும்
நிகோடின்
சிறுக சிறுக...
உன் உயிர் பருகும் கொடிய விஷம்
என்பதை நீ அறிவாயா..?
ஆம்...
சுவாச மண்டலத்தை
சுக்கு நூறாய் உடைத்து விடும்
வக்கிர புத்திக்காரன் இந்த சிகரெட்!.
ஒரு இனிய நண்பனைப்போல
தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு
உறவாடும்
இந்த 'விரல் நீள ஹிட்லர்'.
உன் மேல் படிப்படியாய்
ஆதிக்கம் செலுத்தி
உன்னை அழித்து விடும்
ஓர் சர்வாதிகாரி!
மனிதன்
புகைத்து எரிந்த ஒவ்வொரு சிகரெட்டும்
அவனது மொத்த ஆயுளின்
ஒரு நிமிடத்தை பறித்து விடுவதாய்
அறிவியல் ஆய்ந்து சொல்கிறது
எண்ணிப்பார்...
இந்த பூமியில் அப்படி
நீ இழந்த இனிய பொழுதுகள்
எத்தனை என்பதை
வேண்டாம் சிகரெட்..
அது உனது உயிருக்குள்
செய்து விடும்
பவர் கட்.
அணுகுண்டு வீச்சில் அழிந்தன
ஹிரோஷிமா நாகசாகி!
தினம் புகைத்துவீசப்படும்
அற்ப சிகரெட் துண்டுகளால்
அழிகின்றனர்
லட்சோபலட்ச
ஹிரோஷினிகள்..
நாகசாமிகள்...
கடைசியில்...
சிகரெட் பெட்டிகள்
அழகாய்ச் சேர்த்து
அடுக்கப் பட்டுத்தான்
புகைப்பவனுக்கான
சவப்பெட்டி ஒன்று
தயாராகிக் கொண்டிருக்கிறதா..?

கருத்துகள்
சினிமால என்னடான்னா இரு விரல்களின் நடுவே சில நொடிகளே வாழும் ஆறாம் விரல் னு சுலபமா பாடுறாங்க...
தற்கால சினிமா முடமாகி போய் விட்டது. நல்ல சிந்தனையை அது வளர்க்கவில்லை. நான் பாட்டெழுதி அந்த குறையைத் தீர்த்து வைக்கிறேன் விடுங்கள்..
சினிமா ஒரு ராட்சச ஊடகம், அது வாழ வேண்டும் முறையாக
அதற்கு மங்கைகள் கிளர்ந்தெள வேண்டும்
புதிய தலைமுறையாக!
கவிதை உதட்டையும், விரலையும், நெஞ்சையும் சுட்டுருச்சு. பெருமைக்காக சொல்லலை... நிஜம்மாவே அருமை!
அதான் தனியாவே பதிவு போட்டு இணைப்பும் கொடுத்திட்டேன்.
நன்றி!
ஒரு போலி நண்பனை
ஒத்தவள்/ன்
இந்த மனப்புகைச்ச்ல் பேர்வழி//
அருமையான விசயம்.. ஒவ்வொன்றும் அழுத்தமான உண்மை.பொறுத்தமான உவமானங்கள்..
கவிஞரே.. எங்கோ உரசுதே? நீங்க? அப்போ? ;-)
//சிகரெட் பெட்டிகள்
செங்கற்களாய் சேர்த்து
அடுக்கப் பட்டுத்தான்
புகைப்பவனுக்கான
சவப்பெட்டி ஒன்று
தயாராகிக் கொண்டிருக்கிறதா..?
//
இது நச்.
சிந்தனை அருமை - உவமைகள் அருமை - நல்லதொரு கவிதை - நீளம் சற்றே குறைக்கலாமோ
தீவிரவாதி - காரியதரிசி - கொள்ளைக்காரி - நண்பன் - மனப் புகைச்ச்சல் பேர்வழி - விலைமகள் - வக்கிர புத்திக்காரன் - ஹிட்லர் - என அத்தனை அவதாரங்கள் ......
நன்று நன்று
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
கவிஞன் ஒரு எரிமலையாய் நின்று வெடிக்க வேண்டும், எத்தனையோ உவமைகள் சீறி எழும்.. வந்து விழும்.
அவை எல்லாம் நேரடி அனுபவஙகள் என பொருள் கொள்ள முடியாது
ஒரு social evil பற்றி பாடும் போது
இன்னொரு social evil உவமையாக
வந்து விழுகிறது. இடையில் நான் என்ன செய்ய கவிதாயினி...