தேம்ஸ் நதிக்கரையில் வீசும் ஒரு குற்றாலச் சாரல்!! --கவிஞர் புதுயுகன் அவர்களுடன் ஒரு இலக்கியச் சந்திப்பு


  இலக்கிய  சாளரம் : நேர்காணல்





 விஞர் புதுயுகன் 

(இயற்பெயர்:TK. இராமானுஜம்) . தமிழ்க் கவிஞர்.  மணிவாசகர் பதிப்பகம் பதிப்பித்திருக்கும் “கதவு இல்லாத கருவூலம்” (2013) மற்றும் “மடித்து வைத்த வானம்” (2013) என  இலக்கியத்தரம் மிக்க இரு கவிதை நூல்கள் மற்றும் வானதி பதிப்பகத்தார் தந்த "கனவும் வெற்றியும் பேசிக் கொண்டவை" (2018) என்ற முத்தான, இளைஞர்களுக்கான சுய முன்னேற்ற நூல் ஆகியனவற்றை தமிழுக்கு சமீப ஆண்டுகளில் தந்தவர். புதிய நூல்களை தரவிருப்பவர்.

 மூத்த கவிஞர்களான கவிஞர் வைரமுத்துகவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் ஆகியோரது பாராட்டுகளைப் பெற்றவர்.

    கணிப்பொறியாளர்கல்வியாளர்ஆய்வாளர்சிறுகதைநாவலாசிரியர், கவிஞர் எனப்  பளிச்சிடும் பன்முகம் கொண்ட படைப்பாளியாக மிளிர்கிறார்.

புதுயுகனின் புதுக்கவிதைகளில் தனித்துவம்மிக்க கவிமொழி கோலோச்சி நிற்பதாக கவிஞர் சிற்பி கதவு  இல்லாத  கருவூலம்” நூலுக்கான முன்னுரையில் சிலாகித்துக் கூறுகிறார்.

ஆங்கில புலமை வாய்த்த இவர் “Air, Fire &Water” எனும் ஆங்கில நூலில் சுதந்திர போராட்டத்தின் போது தமிழகத்தில் சர்தார் வேதரத்தினம் அவர்களின் பெரும் முனைப்பில்  நடந்த வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்தைப் பற்றிய வரலாற்றுப் பதிவினை ஒரு ஆவணப் படத்தின் நுணுக்கங்களோடு அழகு மிளிற படம் பிடித்துக் காட்டியிருப்பது அருமை.

நவீனத்துவத்தின் புதுமையும்தொன்மையின் வளமையும் தன் படைப்புகளில் அழகாய் குழைத்துத்தரும் புதுயுகன்தமிழ்க் கவிதை உலகிற்கு இலக்கிய மரபிலிருந்து வந்த ஓர் தனித் திறம் கொண்ட ஆளுமை என்றால் மிகையல்ல.

 

 இதோ அவருடன் ஒரு இனிய சந்திப்பு இலக்கிய ரசிகர்களுக்காக:

 

1: புதுயுகன் என்ற உங்களது அழகான புனைபெயரிலேயே நீங்கள் ஒரு புதுமைவிரும்பி என்பதனைச் சற்றே கோடிட்டு காட்டி விடுகிறீர்கள். முதலில் பெயர் காரணம் குறித்து சொல்லுங்கள்?

ஒவ்வொரு படைப்பாளிக்கும் ஒரு பிரத்தியேகத் தன்மை இருக்கும். இருக்க வேண்டும். தனித்துவமும்,புதுமையும் கொண்டு ஆக்கப்பூர்வமான விளைவுகளை ஏற்படுத்துகிற படைப்புகளை படைக்க விரும்புகிறேன். அதனால் தான் இந்தப் புனைப் பெயரை வரித்துக் கொண்டேன்.

 புதிய பாணிகளை, புதிய மாற்றங்களை, புதிய யுகத்தைத்  காணவிரும்புகிறேன். தொலை நோக்குகிறவனாக, முதல் நோக்குகிறவனாக இருக்கவேண்டும் என்ற பேரவாவும் உண்டு. இவை எல்லாம் தான் புதுயுகன் என்ற இந்தப் பெயருக்குள் இருக்கின்ற, இயங்குகின்ற அணுக்கள் எனச் சொல்லலாம்.

புதுயுகன் என் புனைப்பெயராகி 25 ஆண்டுகள் கடந்து விட்டன.

எனது முதல் கதையை, குமுதத்தில் 1994 ஆம் ஆண்டு, புதுயுகன் என்ற பெயரிலேயே எழுதினேன்.அந்தப் புள்ளியிலிருந்துதான் என் இலக்கிய வாழ்வு தொடங்கியதை அறிகிறேன். அது ஆக்கப் பூர்வமான திசையில் போய்க்கொண்டிருப்பதையும் உணர்கிறேன்.

2. அடிப்படையில், ஒரு கணிப்பொறியாளரான நீங்கள் கவிஞராக மாற்றம் பெற்றது எப்படி?

கவிஞனாக இருந்தவன் கணிபொறியாளர் ஆனேன் என்பதே உண்மை. கவிதை தான் முதலில் எனக்கு இயல்பாக வந்தது.

கணிப்பொறி, தர்க்கம் சார்ந்த துறை. கவிதை, உணர்வுகளின் படித்துறை. இரண்டும் இருவேறு துருவங்கள். மூளையின் இருவேறு பக்கங்கள். ஆனால் சரியாக திட்டமிட்டால் அந்தப் பக்கங்களை இணைக்கலாம். நியுரான் செல்களின் பலவிதசூட்சமம் மிகுந்த இணைப்புகளின் அடிப்படையில் தான் ஒருவரின் மூளைத்திறனே அமைகிறது என்பதனை நீங்கள் அறிந்த ஒன்றல்லவா? 

கணிபொறியாளராக இருக்கும்போது கவிதை செய்வதில்லை. ஆனால் கவிஞனாக இருக்கும்போது கணிப்பொறியை எழுதுகிறேன். ஆக, கவிதை என் உயிர்ப்புகணிப்பொறி என் படிப்பு.



3. “பாட்டியும் மின்னஞ்சல் பேரனும” “மாணவன் பாஸ் பரிட்சை பெயில்’ ‘ட்விட்டர் கழிதலும் புதியன புகுதலும்’ ( கதவு இல்லாத கருவூலம்) மற்றும் முகம்தேடி” “நல்லதோர் வீணை”( மடித்து வைத்த வானம்) போன்ற நவீனத்துவம் மிக்க கவிதைகள் ஒரு சமூக மாறுதலை வேண்டி நிற்பதாகத் தோன்றுகின்றன. அது குறித்து மேலும் கூறமுடியுமா?

கவிதைக்கு ஒரு பயன்பாடு இருப்பதாகவே தோன்றுகிறது. சமூகத்தில் இருந்து கவிதை பிறக்கும் போது, கவிதையில் இருந்து ஏன் சமூகமாற்றம் பிறக்கக்கூடாது?

என் கவிதையின் முக்கிய பொருண்மைகள் அத்தகையதே.

அரசியல் விடுதலை பெற்றுவிட்ட இந்தத் தேசம், பொருளாதார விடுதலை பெற்று வருகிற இந்தத் தேசம் இன்னும் கலாச்சார விடுதலை பெறவில்லையோ என்ற ஒரு முக்கியமான கேள்வி இருக்கிறது எனக்கு. நீங்கள் குறிப்பிட்டிருப்பதைப்

போன்ற கவிதைகள், அந்தக் கேள்விக்கான சில கவிமுகங்கள்அல்லது பதில்கள். இதுதவிர தொழில்நுட்பம், அறிவியல் இவற்றைக் கவிதை செய்வதில் அடங்காத ஆவல் எனக்கு.

4. இலக்கிய நயம் உங்களுக்கு இயல்பாக கைகூடி வருகிறது. அதற்கு உங்களது  இலக்கியப் பிண்ணனி கொண்ட குடும்பப் பாரம்பரியம் ஒரு காரணம் எனக் கொள்ளலாமா?

நன்றி. அதுவும் ஒரு காரணம் தான். 12000 பாடல்களுக்கு மேல் அமைந்தமகாத்மா காந்தி காவியம்ஒரு இலக்கிய மாரத்தான். அதை எழுதியவர் என் தாத்தா பெரும்புலவர் இராமானுசக் கவிராயர். நீண்ட இலக்கிய வேர்கள் என்னிடம் உண்டு.

இருப்பினும் ஒவ்வொரு படைப்பும் புதியதொரு பூ என்றே கருதுகிறேன். நயத்திற்காக மெனக்கெடுவதில்லை. இயல்பாக கைகூடி வருகிறது என்ற உங்களது பார்வை சரியான ஒன்றுதான்.

5. ‘Air, Fire & Water’ எனும் ஆங்கில நூலில், இராஜாஜி தலைமையில் தமிழ்நாடு கண்ட உப்பு சத்தியாகிரக போராட்டத்தினை பதிவு செய்துள்ளீர்கள். அந்த வரலாற்றுச் சம்பவம் பற்றிய பதிவுகள் இதற்கு முன் நூல்வடிவில் வெளிக் கொணரப் பட்டுள்ளதா?

உப்பு அறப்போரினைப் பற்றி தமிழில் சில நூல்கள் வந்திருக்கின்றன. மூதறிஞர் இராஜாஜியே அதைப்பற்றி நூலாக எழுதியிருக்கிறார். எழுத்தாளர் பகீரதன் மறைக்காட்டில் ஒரு மாணிக்கம்என்று சர்தார் வேதரத்தினத்தின் வாழ்க்கையை எழுதியிருக்கிறார். அதில் அந்தச் சம்பவங்கள் வருகின்றன. இந்நூல் இப்போதுஹிந்தியிலும் வந்திருக்கிறது.இப்படியாக இன்னும் சில பதிவுகள் இருக்கின்றன.

எனினும் தென்னிந்திய பங்களிப்புகள் எப்போதுமே இந்திய வரலாற்றில் முழுமையாக பதிவு செய்யப்படுவதில்லை என்பது தமிழர்களின் நீண்டகால் ஆதங்கம்.

பராக்கிரமசாலியான்  இராசேந்திரச் சோழன் அக்பரைப் போன்ற ஒரு இந்தியப் பேரரசன் என்று எத்தனை வரலாற்று நூல்கள் சொல்கின்றன? அவை மறைக்கவோ அல்லது மறுக்கவோ படுகின்றன.

இதனாலேயே இதை உலக நோக்கில், முதல்முறையாக ஆங்கிலத்தில், மிகச் சரியான தகவல்களோடு எழுத விரும்பினேன். அதுவே Air, Fire & Water என்ற நூலானது.

 இது இலண்டன் இந்திய தூதரகத்தின் நேரு சென்டரில் வெளியானது. பெல்ஜியம் தேசத்தில் ப்ளெமிஷ் மொழியில் மொழியிலும் பெயர்க்கப்பட்டுள்ளது.

 சந்தடி மிக்க இலண்டனில் University College of London (UCL) என்ற கல்லூரியில் உயர் பதவி வகிக்கும் நீங்கள், கவிதைக்கான நேரத்தை எப்படி தேடிப்பிடிக்கிறீர்கள்?

சந்தடி மிக்க இலண்டனில் தொலைந்து போய்விடக்கூடாது என்பதற்காகவே நிறைய கவிதைத் தேடல்களை நிகழ்த்துகிறேன் (குழாய் இரயில்களில், தேம்ஸ் நதி மீது…).

  கல்விப்பணி இல்லாதபோது கவிதைப்பணி; கவிதைப்பணி முடிந்ததும் கல்விப்பணி. ஓய்வெடுப்பதற்கு இது ஒரு நூதன வழி  இதல்லவா?

7. தொன்மையும், செழுமையும், வன்மையும் மிக்க செம்மொழியாம் தமிழ், அழிவின் விளிம்பில் இருப்பதாக ஒரு அபயக்குரல் கேட்ட வண்ணம் உள்ளததே? ஒரு அயல் நாட்டு வாழ் தமிழராக அதைப்பற்றி உங்களின் கருத்து?

அப்படி சில அபயக்குரல்கள் கேட்கவே செய்கின்றன - முக்கியமாக புலம்பெயர்ந்த தமிழர்கள் வாயிலாக, உலக மாநாடுகளில். ஆனால் தமிழின் எதிர்காலத்தை, அதன் நீண்ட இறந்த காலத்திலிருந்தே தான் எடுத்தாக வேண்டும். மிக மூத்த மொழிகளுள்வாழுகிற ஒரேமொழி தமிழ்தான். படையெடுப்பு, அந்நிய ஆதிக்கம் எல்லாவற்றையும் கடந்து வந்த தமிழ், வருகின்ற அபாயங்களையும் கடந்து வரும் என தீர்க்கமாக நம்புகிறேன்.

தமிழ்  வணிக சினிமா என்ற பொழுது போக்கு  சாதனத்தையும் தாண்டி  தமிழ் சிந்திக்கப்பட வேண்டும். இலக்கிய வாசிப்பு அதிகரிக்க வேண்டும். ஒன்றிணைக்கப்பட்ட முறையில் தமிழ் முன்னெடுத்துச் செல்லப்படவேண்டும். ‘World Wide Tamil’ என்ற ஒரு திட்டத்தைஒருஉலகமாநாட்டில்ஏற்கனவேமுன் வைத்திருக்கிறேன்.

8. எழுத்து.com போன்ற இணையதளத்திலும் தங்கள் எழுத்துக்கள் பதிவு செய்கிறீர்கள். இணையதளம் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு எவ்வளவில் உதவி வருகின்றது?

தங்களது முந்தைய கேள்விக்கு பதில் இந்தக் கேள்வியிலும் இருக்கிறது. இதில் மகிழ்ச்சியான செய்தி, இணையம் எல்லோரும் எழுதுவற்கு வாய்ப்பு தருகிறது.

நிறைய நல்ல படைப்புகளையும், சில உச்ச படைப்புகளையும் கூட இணையத்தில் பார்க்க முடிகிறது.

ஆனாலும் இலக்கியத்தரம் இன்னும் உயரவேண்டும் என்பதே என் கருத்து இதற்குக் காரணம், இந்தப் படைப்புகளின்தரம்அல்லதுதரம் இன்மை யார் கட்டுப்பாட்டிலும் இல்லை. இது ஒன்றைத் தவிர இணைய தமிழ் வரவேற்கப்படவேண்டிய களம் தான். இனி தமிழ் - இணைய தமிழ்,; தொழில்நுட்பத் தமிழ். 

9. மின்வழிக்கற்றல் [E-Learning] பற்றி உங்கள் கருத்து, பங்களிப்பு என்ன? அது கற்றல் மற்றும் கற்பவரிடம் ஏற்படுத்தி வரும் புதிய தாக்கம் எத்தகையது?

மின்வழிக்கற்றலை தமிழுக்கு எப்படிப் பயன்படுத்தலாம் என்று கலிபோர்னியா உலகத்தமிழ் மாநாடு ஒன்றில் 2012இல் பேசினேன்.

கல்வி, ஒரு மிகப்பெரிய மாற்றத்தை சந்திக்க இருக்கிறது. அந்த மாற்றத்தின் வாசல் அருகே இப்போது நின்று கொண்டிருக்கிறோம். ‘கற்பித்தல் போய் கற்றல் வருகிறது!

“கல்வி சாலை, சாலையில் கல்வி ஆகிறது”என்று சமீபத்தில் மின்வழிக் கற்றலைப் பற்றிய கவிதை ஒன்றில் எழுதினேன்.

மின்வழிக்கற்றல், மாணவனை வலிமைப் படுத்திவிடும். எல்லோரையும்  மாணவர்கள் ஆக்கிவிடும்.  அங்கே கல்வித்தரம் முதல் தரமாக இருக்கிறது. எனது பணி, அங்கே கல்வி தரமேலாண்மை சார்ந்தது. இந்திய ஞானம், அந்தக் கல்வித் தர உத்திகள், மின்வழிக்கற்றல் - இந்த மூன்றும் ஒன்று சேர்ந்தால் இதுவரை வந்திருக்கிற உலக கல்வித் திட்டங்களில் அதுவே உச்சத் திட்டமாக அமையும். எனது கனவுகளில் இதுவும் ஒன்று.

10. உங்களது அடுத்த இலக்கிய இலக்கு எதுவெனச் சொல்லலாம்?

தொன்மைக்கும் தொன்மையை, நவீனத்திற்கும் நவீன மொழியில் சொல்ல விரும்புகிறேன். இதுவரை சொல்லப்படாத கதைகள், கவிதைகள் சொல்லப்பட வேண்டும். மாயா யதார்த்தமும், மிகுகற்பனையும் இன்னும் நிறைய தமிழில் வரவேண்டும்.

புதிய குரல்கள், புதிய சிந்தனைகள், புதிய பொருண்மைகள், புதிய உத்திகள் வரவேண்டும். நல்ல விழுமியங்கள் அவற்றில் இருக்கவேண்டும்.  தமிழின் இனிமை, இளமை, பொருண்மை தரணி அறிய வேண்டும்.

 

சந்திப்பு: இலக்கியன்

 

                                                                *********

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மறதி அணிக !!

புரளி

சித்திரை நிலவு போல் இதம்!!